search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படை வசதிகள்"

    • திருப்பனந்தாளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதியான சாலை வசதி, கழிவறை வசதி வேண்டி முழக்கங்களை எழுப்பினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நீலப்புலிகள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா, தலைமை தாங்கினார்.

    நீலப் புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன், துணை பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட தலைவர் காமராஜ், மாநில துணை தலைவர் ரமேஷ் அம்பேத், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருப்பனந்தாள் ஊராட்சி கிராமங்களில் அடிப்படை வசதியான சாலை வசதி கழிவறை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    ஆர்பாட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் மட்டும் 800 மாணவிகள் படிக்கின்றனர்.
    • வகுப்பறையில் 40 பேர் அமர்ந்து படிக்க வேண்டிய நிலையில் 80 பேர் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வகுப்பறையில் மாணவிகளுக்குக் கவனச் சிதறல் ஏற்படுகிறது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் 40 சென்ட் நிலப்பரப்பில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளி கடந்த 1986-ம் ஆண்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகவும், 2014-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

    22 வகுப்பறைகளுடன் செயல்படும் இப்பள்ளியில் தற்போது, 1,800 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 52 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை.

    இதனால், ஒரே வகுப்பறையில் 80 மாணவிகள் அமர்ந்து கல்வி பயிலும் நிலையும், வகுப்பறை நடைபாதைகளில் அமர்ந்து கல்வி பயிலும் நிலையுள்ளது.

    மேலும், விளையாட்டு மைதானம், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், மாணவிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையைப் போக்க கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் கூறுகையில் இப்பள்ளியில் மலைக் கிராம மாணவிகள் அதிகம் படித்து வரும் நிலையில், பள்ளி 40 சென்ட் நிலத்தில் உள்ளது. மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் தேவை.

    மேலும், இதேபள்ளியில் உருது பள்ளியும் உள்ளது. போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், இட நெருக்கடியில் மாணவிகள் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இப்பள்ளியின் அருகே செயல்பட்ட நீதிமன்றம் தற்போது, வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தைப் பள்ளி பெயருக்கு மாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.

    ஆனால், இதுவரை பள்ளி பெயருக்கு மாற்றவில்லை. இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பெண் கல்விக்கு முக்கியம் என விழிப்புணர்வு செய்யும் நிலையில், இங்கு கூடுதல் வகுப்பறை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

    மேலும், கழிவறை, விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில், மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையுள்ளது. எனவே, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறிய தாவது:-

    பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் மட்டும் 800 மாணவிகள் படிக்கின்றனர். ஆண்டுக்கு 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் உயர் கல்விக்குச் செல்கின்றனர்.

    வகுப்பறையில் 40 பேர் அமர்ந்து படிக்க வேண்டிய நிலையில் 80 பேர் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வகுப்பறையில் மாணவிகளுக்குக் கவனச் சிதறல் ஏற்படுகிறது.

    போதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம், கழிவறை வசதி களை மேம்படுத்தினால், மலைக் கிராம மாணவிகள் கல்வியில் சிறப்பிடம் பிடிக்கும் நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஒரு ஆண் கல்வி கற்றால் தனியொருவன் பயனடைவான். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பமும், சமுதாயமும் மட்டுமின்றி நாட்டுக்கே நற்பயன் கிட்டும். இதை செயல்படுத்த மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்பதே தேன்கனிகோட்டை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன.
    • சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீா் கால்வாய், வேகத்தடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து அவிநாசி செங்காடு கிளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி பேரூராட்சி 9 வது வாா்டு முத்துசெட்டிபாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன. எனவே உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும்.

    இந்திரா நகா் பகுதியில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை சாலையில் இருந்து சேவூா் சாலை முத்துசெட்டிபாளையம் பகுதி வரை அமைந்துள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை நிறம் வா்ணம் பூசி, ரிப்ளட் விளக்கு அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா். இம்மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிா்வாகத்தினா் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

    • மதுரையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட் பட்ட விளாங்குடி 1-வது வார்டு பொற்றாமரை நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    அந்தப்பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை.

    மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கண்டித்தும், பொற்றாமரை நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டுமென வலியு றுத்தியும் இன்று காலை அந்தப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு விட சென்ற பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் செய்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் வார்டு செயற்பொறியாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

    • அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்
    • ஆனால் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இதுவரை புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை

    அரியலூர்,

    அரியலூர் பேருந்து நிலையம் கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, புதிய பேருந்து நிலைய கட்டிடங்கள் கட்ட ரூ.7.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும், இதன் பணிகள் முடிய 18 மாதங்கள் உத்தேசிருப்பதாலும், தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் - திருச்சி புறவழிச்சாலையில், வாணி திருமணமண்டபம் எதிர்புறம் உள்ள தனியார் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்காலிக பேருந்து நிலையம் என்றாலும் ஒன்றரை வருடங்கள் தொடர்ந்து இங்கு செயல்பட உள்ளது. ஆனால் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இதுவரை புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடை, குடிநீர், மின்விளக்கு, ஏடிஎம் என்று அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் அரியலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், திருச்சி, தஞ்சை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் மாதாகோவில், சத்திரம், அண்ணாசிலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வரவேண்டும். சேலம், பெரம்பலூர், திட்டக்குடி பார்டர் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் மேம்பாலம், சத்திரம், அண்ணாசிலை வழியாக தற்காலிக பேருந்துநிலையம் செல்ல வேண்டும். தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் அரியலூர், நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்லவேண்டும். மேலும் ஆட்டோ வாடகை கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதோடு, தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் நகருக்குள் சென்று வர நகர பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் உண்டியல் சீலை அகற்றி பணத்தை எண்ணிக்கை செய்ய முயன்றனர்.
    • அடிப்படை வசதிகள் செய்து தந்த பின்னர்தான் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து செல்வோம் என உத்தரவாதம் அளித்திருந்தனர்.

    சிவகிரி:

    இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

    கோவில் உண்டியல்

    விடுமுறை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் திரளாக வருகை தந்து கிடா வெட்டி, முடி காணிக்கை செலுத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர். அதிகளவில் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, காணிக்கை செலுத்துவதால் இக்கோவில் உண்டியல் நிரம்பி விடுகிறது.

    இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கேசவராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகன், எழுத்தர் குமார் மற்றும் உண்டியல் பணத்தை எண்ணும் இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் ஆகியோர் காளியம்மன் கோவிலில் உள்ள உண்டியல் மீதுள்ள சீலை அகற்றி பணத்தை எண்ணிக்கை செய்ய முயன்றனர்.

    அடிப்படை வசதிகள்

    இது குறித்து தகவல் அறிந்த தேவிபட்டணம் ஊராட்சிமன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. கிளைச்செயலாளர் முருகன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகனிடம், கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை, சுகாதாரமான குடிநீர் மற்றும் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள், கோவிலை சுற்றிலும் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம்.

    அப்போது அடுத்த முறை அடிப்படை வசதிகள் செய்து தந்த பின்னர்தான் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து செல்வோம் என உத்த ரவாதம் அளித்திருந்தனர். இந்நிலையில் பக்தர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல், உண்டியல் பணத்தை எடுத்து செல்ல வந்துள்ளீர்கள்.

    எனவே உண்டியல் பணத்தை எண்ணக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் அகற்றிய உண்டியலின் மீது மீண்டும் சீல் வைத்தனர். இனிமேல் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் உண்டியல் பணத்தை எடுக்க வரமாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி மன்ற 12 வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர்.
    • ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாப்புலியூர் குப்பன்குளத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு, மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயக்குமார், சித்திரவேல், ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கும் வரை அதன் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் நிலையத்தில் போதிய முன்னறிவிப்பின்றி பஸ்கள் நிற்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பஸ்கள் வந்து செல்லும் நேரம் குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு தற்காலிக பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்குவதிலும் குளறுபடி உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    புதியதாக பஸ் நிலையம் கட்டும் பணிகள் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்ற நிலையில் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும், பஸ்கள் நிற்பதை முறைப்படுத்தி வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • அடிப்படை தேவைகள் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    • ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கதவை அதிகாரிகள் திறந்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுங்கரஅள்ளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே கடந்த மே 1-ம் தேதி நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தொடர்ந்து கிராம சபை கூட்டங்களின் தீர்மான அடிப்படையில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை எனக்கூறி நேற்று முன்தினம் சுங்கரஅள்ளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றனர்.

    நேற்று காலையில் ஊராட்சி மன்ற பணிகளை செய்ய வருகை தந்த ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் புதியதாக போட்டிருந்த பூட்டை கண்டு அதிர்ச்சியடைந்து வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி, கடத்தூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் குமார் ஆகியோர் வருகை தந்து பூட்டு போட்ட பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த தகவல் அறிந்த கடத்தூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சில நாட்களில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றி தருவதாக அதிகாரி முன்னிலையில் தலைவர் அளித்த உறுதியின் பேரில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கதவை அதிகாரிகள் திறந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ப்படாமல் உள்ளது என பல பகுதிகளிலும் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
    • அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். அப்பொழுது கிராம ங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். எழுத்தூர் கிராமத்தில் குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதிகள், சிமெண்ட் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    உடனடியாக அதிகாரிகளை அழைத்து கழிவுநீர் வடிகால் வசதிகளையும் குடிநீர் வசதிகளையும் செய்ய உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர் .மேலும் ஐயவனூர், மாங்குளம் கிராமத்தில் உள்ள கொவில்களை ஆய்வு செய்து கோவில்களை புனரமைப்பு செய்ய நிதி உதவிஅளித்து உடனடியாக கும்பாபிஷேகம் செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
    • இந்த பகுதியில் சாலை அமைத்து தரவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் ஆகும். குடைவரை கோவிலான இங்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    மலைமேல் காசி விசுவ நாதர் கோவில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையானது இயற்கையிலேயே லிங்க வடிவில் அமைந்துள்ளதால் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக திருப்பரங்குன்றம் உள்ளது.

    இங்கு பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பவுர்ணமி கிரிவலம் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மலையை சுற்றி சுமார் 3½ கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப் பாதை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    மேலும் மலையை சுற்றி கோவில் வாசல் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான கழிவறைகள் இருந்தாலும் அவை அனைத்திலும் கூடுதல் கட்ட ணம் வசூலிக்கப்படு கின்றது என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதே போல கோவில் வாசல் மற்றும் முக்கிய பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மலைக்கு பின்பகுதியில் அமைந்துள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவில் பகுதிக்கு செல்ல சுமார் 500 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படாமல் மண் பாதையாக உள்ளது.இந்த பகுதியில் சாலை அமைத்து தரவும் பொது மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை தெற்கு மண்டலத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
    அவனியாபுரம்

    மதுரை மாநகராட்சி  தெற்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில் மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ் சர்மா, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் முத்துமாரி ஜெயக்குமார், கவிதா செல்வம்,பூமா முருகன், உள்ளிட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர் .

    100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதிசெய்து தரவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

    பா.ஜ.க. கவுன்சிலர் பூமா முருகன் தெற்கு மண்டல அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என்றும், மாநகராட்சிக்கு மாநில நிதியை விட மத்திய அரசு நிதி தான் அதிகமாக கிடைக்கிறது என்றும், இந்த நிலையில் மத்திய அரசின் நிதியை பெற்றுள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் பிரதமரின் படம் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்து மனு அளித்தனர். 

    மனுக்களை பெற்ற மேயர், துணை மேயர்,  எம்.எல்.ஏ., மண்டலத் தலைவர் ஆகியோர் மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தனர்.
    ×